கொரோனாவின் ஆரம்ப புள்ளியான வூஹானில் 76 நாள் ஊரடங்கு தளர்வு!

கொரோனா வைரஸின் ஆரம்ப புள்ளியான, சீனாவின் வூஹானில் 76 நாள் ஊரடங்கு தளர்த்தப்பட்டதை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.  உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில் தான் முதன்முதலில் கண்டறியப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் கொரோனா வைரசின் வீரியத்தை உணர்ந்த சீன அரசு, வூஹான் நகரில் ஊரடங்கை அமல்படுத்தியது. வைரஸ் பரவும் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக அந்நகரம் முழுவதும் சீல் வைக்கப்பட்டு சுமார் 1 கோடியே 10 லட்சம் மக்கள் தனிமைப்படுத்தப் பட்டனர். மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அனைத்து போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டதன் காரணமாக வூஹான் நகரில் இருந்து சீனாவின் பிற நகரங்களுக்கு வைரஸ் பரவும் வேகம் வெகுவாக குறைந்தது. தற்போது அங்கு கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக உயிரிழப்பு ஏதும் இல்லாததாலும், புதிதாக யாருக்கும் வைரஸ் தாக்குதல் இல்லாததாலும் 76 நாட்கள் நீடித்த ஊரடங்கு தற்போது தளர்த்தப்பட்டது. ஊரடங்கு தளர்த்தப்பட்டதை மக்களும், வணிகர்களும் கொண்டாடினர். சில நிறுவனங்கள் வண்ண வண்ண மின்விளக்குகளை ஒளிரவிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் அங்கு ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டு மெல்ல மெல்ல மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.

Exit mobile version