மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாள் இன்று கொண்டாட்டம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. பிறந்தநாளையொட்டி, இன்று காலை தலைமைச் செயலகத்தில் நடைபெற இருக்கும் மரம் நடும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் கலந்து கொண்டு மரக் கன்றுகளை நடுகின்றனர். 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள், பெண் குழந்தை பாதுகாப்பு தினமாக கடைபிடிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.

அதன்படி, இன்று காலை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் கலந்து கொள்கின்றனர். இதனையடுத்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து இருவரும் மரியாதை செலுத்துகின்றனர்.

மேலும், அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்த இருக்கின்றனர். இதனையடுத்து, ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா சிறப்பு மலரை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் வெளியிட இருக்கின்றனர். தொடர்ந்து, கட்சி அலுவலகத்தில் மருத்துவ முகாம், அன்னதானம், மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கிறது.

Exit mobile version