5வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இன்று தொடக்கம்

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், யாருக்கும் தொற்று பாதிப்பு உறுதியாகாததால், திட்டமிட்டப்படி போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2க்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. நான்காவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாகவே இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அவருடன் தொடர்பில் இருந்த பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருணுக்கும், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்த நிலையில், ஐந்தாவது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பாக, அணியின் தலைமை மருத்துவர் நிதின் படேலுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, இந்திய அணியின் பயிற்சி ரத்து செய்யப்பட்டு வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதனால், திட்டமிட்டப்படி ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், இந்திய அணி வீரர்கள், அணி நிர்வாகிகள் என மொத்த 21 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், யாருக்கும் தொற்று பாதிப்பு உறுதியாகாததால், திட்டமிட்டப்படி போட்டி நடைபெறும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மான்செஸ்டர் மைதானத்தில் இன்று தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை இந்திய அணி டிரா செய்தாலே தொடரை வென்றுவிடலாம். மேலும், 14 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி மீண்டும் தொடரை கைப்பற்றும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

Exit mobile version