சென்னையை சேர்ந்த காவலர் ஒருவர் கடந்த 23 ஆண்டுகளாக சைக்கிளில் மட்டுமே பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் குறித்த சிறப்பு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்..
இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் நேரத்தை மிச்சப்படுத்தவும், ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு விரைந்து செல்லவும், பெரும்பாலான மக்கள் இருசக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்டவற்றை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால், உடல் பருமன், சுற்றுச்சூழல் மாசுபாடு, ஒலி மாசுபாடு, எரிப்பொருள் தட்டுப்பாடு உள்ளிட்டவை ஏற்படுவது தவிர்க்க முடியாததாக உள்ளது.
ஆனால், சென்னையில் காவலர் ஒருவர் சுற்றுச்சூழலையும், தனது உடல்நலத்தையும் பாதுகாக்கும் பொருட்டு, கடந்த 23 ஆண்டுகளாக மிதிவண்டியிலேயே பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர்தான், காவலர் சைக்கிள் சரவணன்..
சென்னை நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக சரவணன் பணியாற்றி வருகிறார். 1997ஆம் ஆண்டு காவலர் பயிற்சியை முடித்த இவர், செங்கல்பட்டு, பழவந்தாங்கல், ஆதம்பாக்கம், புனித தோமையர் மலை என பல காவல் நிலையங்களில் பணியாற்றியுள்ளார். தான் பணியாற்றிய அனைத்து இடங்களிலும், மிதிவண்டியிலேயே அவர் பயணம் மேற்கொண்டதால், அதுவே அவரது அடையாளமாக மாறிப்போனது. இதனால், காவலர் சரவணன், சைக்கிள் சரவணன் என்ற அழகான அடைமொழியையும் பெற்றார்.
தற்போது புனித தோமையர் மலை காவலர் குடியிருப்பில் வசித்து வரும் இவர், நந்தம்பாக்கத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு தினமும் மிதிவண்டியிலேயே சென்று வருகிறார். காவலர் என்பதால் பணி தொடர்பாக பல இடங்களுக்கு பயணிக்க வேண்டி இருக்கும். அப்போதும், அவர் தனது பணிகளை மிதிவண்டியில்தான் சென்று முடித்து வருகிறார்.
மிதிவண்டியில் பயணம் மேற்கொள்வதால் தனது உடலும், மனமும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளதாக அவர் தெரிவிக்கிறார். மேலும், தனக்கு இதுவரை மருத்துவ செலவுகளே வந்தது இல்லை என பெருமையுடன் கூறுகிறார், 51 வயதிலும் ஃபிட்டாக காட்சி தரும் காவலர் சைக்கிள் சரவணன்..
எரிப்பொருள் சிக்கனம், மாசுக்கட்டுப்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை இவர் பேச்சளவில் இல்லாமல், செயலில் காட்டி வருகிறார். அத்துடன், தனது எளிமையான தோற்றம், சிறப்பான செயல்பாடுகள் மூலம் பொதுமக்களையும் அதிகம் கவர்ந்து வருகிறார் தலைமைக்காவலர் சைக்கிள் சரவணன்.