முதல் முறையாக மனிதன் நிலவுக்கு சென்றதன் 50 ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் அமெரிக்காவில் அப்போலோ விண்கலத்தின் மாதிரி வடிவம் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
முதல் முறையாக ஜூலை 16 ஆம் தேதி அப்பல்லோ -11 என்ற விண்கலம் நிலவுக்கு ஏவபட்டது. இந்த விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் உள்பட 3 பேர் கொண்ட குழுவினர் நிலவில் தரையிறங்கி வரலாற்று சாதனை நிகழ்த்தினர். உலகமே வியந்து பார்த்த இந்த அரிய நிகழ்வின் 50 வது ஆண்டு விழா அமெரிக்காவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் விண்வெளி அருங்காட்சியகத்தில் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட அப்போலோ 11 விண்கலத்தின் மாதிரி வடிவம் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. பார்வையாளர்கள் விண்கலத்தின் மாதிரி வடிவத்தை ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.
மனிதன் முதல் முறையாக நிலவுக்கு சென்றதன் 50 வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், முதல் முறையாக நிலவில் காலடி எடுத்து வைத்த போது ஆம்ஸ்ட்ராங் அணிந்திருந்த விண்வெளி உடை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங்கின் பெயர் பொறித்த இந்த விண்வெளி உடையில் அப்போலோ 11 விண்கலத்தின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கண்காட்சிக்கு வரும் பொதுமக்கள் அதனுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆம்ஸ்ட்ராங்க் விண்வெளியில் காலடி எடுத்து வைத்த நாளான ஜூலை 20 ஆம் தேதியை விமரிசையாக கொண்டாட நாசா திட்டமிட்டுள்ளது.