மக்களவை தேர்தலில் 3-ம் கட்டமாக 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது.
நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக கடந்த 11-ஆம் தேதி 20 மாநிலங்களில் 91 தொகுதிகளுக்கும்,18-ஆம் தேதி 13 மாநிலங்களில் 96 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில் 3-வது கட்ட தேர்தல் 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 117 தொகுதிகளுக்கு இன்று நடைபெறுகிறது.
கேரளாவில் உள்ள 20 தொகுதிகளும் குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளும் கர்நாடகாவில் உள்ள 14 தொகுதிகளும் அடக்கம். பாஜ தேசியத் தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் மகள் சுப்ரியா சூலே, சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் ஆகியோர் 3-வது கட்ட தேர்தலை சந்திக்கும் வேட்பாளர்களில் மிகவும் முக்கியமானவர்கள் ஆவர்.
காலை 7 மணிக்குத் துவங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணிக்கு முடிவடையும் எனத் தெரிகிறது. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.