5.64 லட்சம் தபால் வாக்குகள் பதிவு – வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 5 லட்சத்து 64 ஆயிரம் தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

 

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் மாநில சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன், தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் ஆலோசனையில் பங்கேற்றார். அப்போது, வாக்கு எண்ணும் பணிக்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வாக்கு எண்ணுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

 இதனைத் தொடர்ந்து பேசிய சத்யபிரதா சாகு, கொரோனா பாதிப்பால் 10 பொது பார்வையாளர்கள், 6 தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை 5 லட்சத்து 64 ஆயிரத்து 253 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளதாத் தெரிவித்தார். மேலும், வாக்கு எண்ணும் மையங்களில் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும் என கூறினார். வாக்கு எண்ணும் பணியின்போது, 5 ஆயிரத்து 622 துணை ராணுவப் படையினரும், சிறப்பு காவல்படையினர் 5 ஆயிரத்து 154 பேரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்தார். வாக்கு எண்ணும் மையங்களில் 25 ஆயிரத்து 59 காவல்துறையினர் உட்பட 35 ஆயிரத்து 836 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தார்.

Exit mobile version