மருத்துவ படிப்பிற்கான 3,968 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரம்பிவிட்டன : தேர்வுக் குழு

அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள மருத்துவ படிப்பிற்கான, 3 ஆயிரத்து 968 இடங்களும் நிரப்பப்பட்டுள்ளதாக தேர்வு குழு தெரிவித்துள்ளது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கு, நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான மருத்துவ படிப்பு கலந்தாய்வு 8ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வில் 46 எம்.பி.பி.எஸ்., இரண்டு பி.டி.எஸ். இடங்களை மாணவர்கள் தேர்வு செய்தனர்.

9ஆம் தேதி முதல் தொடங்கிய பொது பிரிவினருக்கான கலந்தாய்வில், 977 பேர் மருத்துவ படிப்புகளை தேர்வு செய்தனர். 10 மற்றும் 11ஆம் தேதிகளில் 2 ஆயிரத்து 420 மாணவர்கள் மருத்துவ இடங்களை தேர்வு செய்தனர். 12 ஆம் தேதி நடந்த கலந்தாய்வில், 334 மாணவர்களும், 13 ஆம் தேதி எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வில் 508 பேரும் மருத்துவ படிப்புக்கான இடங்களை தேர்வு செய்தனர்.

5 நாட்களாக நடந்து முடிந்த கலந்தாய்வில் 23 அரசு கல்லூரிகள், 13 சுயநிதி கல்லூரிகளில் உள்ள 3 ஆயிரத்து 968 மருத்துவ படிப்பிற்கான அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரம்பிவிட்டதாக தேர்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version