மே 5ம் தேதி நடைபெறும் 2019ம் ஆண்டுக்கான நீட் தேர்வு, பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வை, ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதி வருகின்றனர். 2019ம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே மாதம் 5-ம் தேதி நடைபெறும் என்றும், இந்த தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நீட் தேர்வு தொடர்பாக டெல்லியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மத்திய பல்கலைக்கழக மானிய குழு மற்றும் தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், அடுத்த ஆண்டு கணினி மூலம் தேர்வு நடத்துவது குறித்து பின்னர் முடிவுசெய்யப்படும் என்றும், மொத்தம் 3000 மையங்களில் நீட் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவித்தார்.