ஒகேனக்கலில் பரிசல் இயக்க மேலும் தடை நீடிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நொடிக்கு 14 ஆயிரம் கன அடியாகக் குறைந்தது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 17ஆயிரம் கன அடியாகக் குறைந்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய இரு அணைகள் நிரம்பியுள்ளன. அந்த அணைகளுக்கு நீர்வரத்துக் குறைந்துள்ளதால் நேற்று மாலை நிலவரப்படி இரு அணைகளில் இருந்தும் மொத்தம் ஒன்பதாயிரத்து 191 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் தமிழக எல்லையான பிலிக்குண்டுலுவிற்கு நீர்வரத்து படிப்படியாகக் குறைந்து வருகிறது. நேற்றுக் காலை ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து நொடிக்கு 17 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி நொடிக்கு 14 ஆயிரம் கனஅடியாகக் குறைந்துள்ளது. ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் தொடர்ந்து 17ஆவது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version