ஹாங்காங்கில் 11-வது வாரமாக நீடிக்கும் மக்கள் போராட்டம்

ஹாங்காங்கில் தன்னாட்சி கோரியும், ஜனநாயகத்தை நிலைநாட்டவும் வலியுறுத்திப் பல்லாயிரக்கணக்கானோர் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியில் ஈடுபட்டனர்.

தன்னாட்சிப் பகுதியான ஹாங்காங்கில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் ஒன்றுதிரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். சீனாவுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை ஹாங்காங்கில் இருந்து சீனச் சிறைகளுக்கு மாற்ற வகை செய்யும் மசோதாவைக் கண்டித்து முதன் முதலில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் தடியடி, கண்ணீர்ப்புகைக் குண்டு வீச்சு ஆகியவற்றுக்குப் பின் அந்த மசோதாவை அரசு கைவிட்டது. இருப்பினும் தன்னாட்சி, ஜனநாயகம் ஆகியவற்றுக்கான போராட்டம் ஞாயிற்றுக்கிழமை தோறும் தொடர்ந்து வருகிறது. பதினோராவது ஞாயிற்றுக்கிழமையாக இன்றும் பல்லாயிரக்கணக்கானோர் விக்டோரியா பூங்காவில் குவிந்தனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடைபிடித்துக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களின் செயல் தீவிரவாதச் செயல்போல உள்ளதாகச் சீன அரசு எச்சரித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இதேபோல் ஹாங்காங் விமான நிலையத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டதால் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version