"இன்று நிஜமாகும் விவசாயிகளின் 100 ஆண்டுகால கனவு"

தென்மாவட்ட விவசாயத்திற்கு புத்துயிர் அளிக்கும், 100 ஆண்டு கால கனவு திட்டமான காவிரி-குண்டாறு திட்டத்தை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

காவிரியில் அதிகமாக வரும் உபரி நீரை கொள்ளிடம் வழியாக கடலில் கலக்க வைப்பதை தடுத்து, அந்த நீரை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த ஏதுவாக, தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும், மிக முக்கியமான நடவடிக்கையானது காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம். இந்த திட்டத்திற்கு தோராயமாக 14 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை இவ்வளவு அதிக செலவில் தமிழகத்தில் எந்தத் திட்டமும் நடைபெறவில்லை. இந்நிலையில், வேளாண் பெருமக்களின் நீண்டகால கோரிக்கையை கருத்தில் கொண்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, காவிரி-குண்டாறு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது.

இத்திட்டத்தின் மூலம், 4 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக மொத்தம் 262 கிலோ மீட்டர் நீளத்திற்கு கால்வாய் வெட்டப்பட உள்ளது. இதில் காவிரி ஆறு செல்லும் கரூர் மாவட்டம் கட்டளையிலிருந்து, தெற்கு வெள்ளாறு வரை 118 கிலோமீட்டர் நீளத்திற்கு, முதல் கால்வாய் வெட்டப்படுகிறது. 2வது கட்டமாக தெற்கு வெள்ளாறு முதல் வைகை வரை, 109 கிலோமீட்டர் நீளத்திற்கும், 3வது கட்டமாக வைகை முதல் குண்டாறு வரை 34 கிலோமீட்டர் நீளத்திற்கும் கால்வாய் வெட்டப்படுகிறது.

இவ்வாறு வெட்டப்படும் கால்வாய் ராமநாதபுரம் மாவட்டம் மானாமதுரை அருகே, இடைக்காட்டூர் கிராமத்தில் வைகை நதியைக் கடந்து செல்கிறது. வெள்ளக் காலத்தின் போது கடலில் கலக்கும் நீரைப் பயன்படுத்தி, வறட்சி மாவட்டங்களான கரூர், திருச்சி, புதுக்கோட்டை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி என 7 மாவட்டங்களில் விவசாயத்திற்கு புத்துயிர் அளிக்க, இத்திட்டம் வகை செய்கிறது.

விவசாயிகளுக்கு கானல் நீராக காட்சியளித்துக்கொண்டிருந்த காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம், தென்னிந்திய நதிகள் இணைப்புக்கான முன்னோடித் திட்டமாக வல்லுநர்களால் பாரப்பட்டப்படுகிறது.

Exit mobile version