சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுடைய பெண்களையும் வழிபாட்டுக்கு அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பு கூறியது. இந்தத் தீர்ப்பைச் சீராய்வு செய்யக் கோரி 66 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சீராய்வு மனுக்களை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றியது. அதேசமயம் கடந்த ஆண்டு வழங்கிய தீர்ப்புக்கு அவர்கள் எந்தத் தடையும் விதிக்கவில்லை.
கார்த்திகை மாதம் நாளை தொடங்க உள்ள நிலையில் இன்று மாலையில் முதல் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. கோவிலில் வழிபாட்டுக்காக இணையத்தளத்தின் வழியாக நூற்றுக்கணக்கானோர் முன்பதிவு செய்துள்ளனர். சபரிமலைக்கு வரும் பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதில்லை என மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து சபரிமலைக்கு வந்த பெண்கள் 10பேரை பம்பையிலேயே தடுத்து நிறுத்திய காவல்துறையினர், அவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டனர்.