380 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சென்னை மக்களுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.
நீர் மேலாண்மையை கருத்தில் கொண்டு, நீர்வள பாதுகாப்பு, நீர் மிகைப்படுத்தும் யுக்திகள் ஆகியவற்றை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், தடுப்பணைகள் கட்டும் மூன்றாண்டு திட்டத்தின் கீழ், இதுவரை 164 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.
அந்த வகையில், சென்னை மாநகர மக்களின் தேவையை பூர்த்தி செய்ய, ஏற்கனவே உள்ள பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு நீர் தேக்கங்களுடன், 5 ஆவது நீர் தேக்கமாக, கண்ணன் கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்ட இத்திட்டம், 380 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டு, மக்களுக்கு அர்ப்பணிக்க தயார் நிலையில் உள்ளது.
இந்த நீர் தேக்கத்தின் மூலம், 700 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற, 5 மதகுகள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மக்களின் தேவைக்காக, நாள் ஒன்றுக்கு, 66 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட உள்ளது.