தாயகம் திரும்ப உதவிய முதலமைச்சருக்கு விளையாட்டு வீரர் வீராங்கனைகள் நன்றி

மலேசியாவில் சிக்கி தவித்தபோது விரைவாக தாயகம் திரும்ப உதவிய தமிழக முதலமைச்சருக்கு விளையாட்டு வீரர் வீராங்கனைகள் நேரில் நன்றி தெரிவித்தனர்.

சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 16 வீரர் வீராங்கனைகள் பங்கேற்று வெற்றி பெற்றனர். இவர்கள் தாயகம் திரும்ப கோலாலம்பூர் விமான நிலையத்திற்கு சென்றபோது, அந்நாட்டு அதிகாரிகளால் திடீரென தடுத்து நிறுத்தப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விளையாட்டு வீரர் வீராங்கனைகள் உட்பட தமிழகத்தை சேர்ந்த 29 பேரை தாயகம் அழைத்துவர மலேசியாவில் உள்ள இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை எடுத்தார். இதனால் அந்த 29 பேரும் பத்திரமாக தாயகம் திரும்பினர்.

இந்தநிலையில் சென்னை பசுமை வழிசாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்திற்கு வந்த விளையாட்டு வீரர்கள், விரைவாக தாயகம் திரும்ப உதவிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தனர். அப்போது அமைச்சர் பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். கடந்த 2 ஆண்டுகளில் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் வெளிநாட்டில் சிக்கித் தவித்த தமிழகத்தை சேர்ந்த 221 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு தாயகம் அழைத்துவரப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version