தஞ்சாவூர் பெரிய கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
உலக புகழ் பெற்ற பெரிய கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். 18 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா, கொரோனா காரணமாக கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த ஆண்டு சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்கியது. பிரமாண்ட கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் ரிஷிப சின்னம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது.
கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், சித்திரை திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோயில் வளாகத்திலேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இந்த ஆண்டு நடைபெறாது என்றும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.