உலகப்புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயிலில், 23 ஆண்டுகளுக்கு பிறகு, இன்று காலையில் குடமுழுக்கு நடைபெறுகிறது.
குடமுழுக்கு விழாவானது, கடந்த மாதம் 27ஆம் தேதி யஜமான அனுக்ஞை வைபவத்துடன் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், முதல்கால யாக பூஜைகள் பிப்ரவரி 1 ம் தேதி மாலை தொடங்கியது. பிப்ரவரி 2ஆம் தேதி இரண்டாம் கால யாக பூஜைகளும், மூன்றாம் கால யாக பூஜைகளும், திங்கள்கிழமை அன்று நான்கு மற்றும் ஐந்தாம் கால யாக பூஜைகளும் நடைபெற்றன. பிப்ரவரி 4 ஆம் தேதி காலை ஆறாம் கால யாக பூஜைகளும், மாலையில் ஏழாம் கால யாக பூஜைகளும் நடைபெற்றன. இன்று அதிகாலை 4.30 மணிக்கு ஜபம், ஹோமம், நாடி சந்தானத்துடன், எட்டாம் கால யாக பூஜை, விமரிசையாக நடைபெற்றது.
இந்த நிலையில், காலை 9.30 மணிக்கு அனைத்து விமானம் மற்றும் ராஜகோபுரத்திற்கு குடமுழுக்கு நடைபெற உள்ளது.10 மணிக்கு பெரியநாயகி உடனுறை பெருவுடையார் மற்றும் அனைத்து மூலவர்களுக்கும் குடமுழுக்கு நடைபெற உள்ளது. மாலை 6 மணிக்கு, பெரியநாயகி உடனுறை பெருவுடையாருக்கு பேரபிஷேகமும், இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா காட்சியருளலும் நடைபெறவுள்ளன. இந்த விழாவினை காண செவ்வாய்க் கிழமை வரை, மூன்றரை லட்சம் பக்தர்கள் வந்ததாகவும், இன்று சுமார் ஐந்து லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.