அதிமுக வில் இருந்து ஒரு சதவீத தொண்டனை கூட அமமுகவுக்கு இழுக்க முடியவில்லை என தங்க தமிழ்செல்வன் ஒப்புக்கொண்டுள்ளார். அமமுகவில் இருந்து பிரிந்து திமுகவில் இணைந்த தங்க. தமிழ்செல்வன், தேனி மாவட்டத்தில் தன்னை நிலை நிறுத்த படாதபாடு படுகிறார் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ஏற்கனவே தேனி மாவட்டத்தில் உள்ள திமுக புள்ளிகள் தங்க. தமிழ் செல்வனை வேண்டா வெறுப்பாக பார்க்க தொடங்கியுள்ளனர். சமீபத்தில் தேனி மாவட்டம், பெரியகுளத்தில் தங்கத் தமிழ்ச்செல்வன், திமுக நிர்வாகிகளைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பல மணி நேரம் திமுக தொண்டர்கள் காத்திருந்த நிலையில் மிகவும் தாமதாக தங்க.தமிழ்செல்வன் நிகழ்விடத்திற்கு வந்தார். அவர் வந்த பின்னர் தான் தாமதத்திற்கான காரணம் தெரிய வந்தது. தேனி மாவட்ட திமுக புள்ளிகளை அவர் கூட்டத்திற்கு அழைத்துள்ளார். முதலில் வருவதாக சொல்லிவிட்டு கடைசி நேரத்தில் அவர்கள் யாரும் வரவில்லை. இதனால் திமுக நிர்வாகிகளுடன் ஒரு பனிப்போரை தங்க. தமிழ்செல்வன் தொடங்கியது உறுதியானது.
திமுக தொடண்டர்களும் எதிர்பார்த்த அளவில் வராத நிலையில் அமமுகவில் இருந்து தான் ஏன் விலகி வந்தேன் என விளக்கினார். அப்போது பேசிய அவர், தினகரன் தனிக்கட்சி தொடங்கியதை பொது மக்கள் வரவேற்கவில்லை என்றார். மேலும் ஒரு சதவீத அதிமுக தொண்டனை கூட அமமுகவிற்கு இழுக்க முடியவில்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.