தாமிரபரணி ஆற்றில் நீர் வற்றியதால் பாண்டியர் கால கட்டிடங்கள் தெரிய ஆரம்பித்துள்ளது

திருச்செந்தூரில் அருகேயுள்ள தாமிரபரணி ஆற்றில் நீர் வற்றியதால் பாண்டியர் கால கட்டிடங்கள் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது.

தமிழ் நாட்டிலேயே உற்பத்தியாகி தமிழ் நாட்டிலேயே கடலில் கலக்கும் ஜீவநதியான தாமிரபரணி ஆறு தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக நீரின்றி காணப்படுகிறது.

இதனால் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரை அடுத்த ஆத்தூர் – உமரிக்காடு பகுதியில் வறண்டு போய் காணப்படும் தாமிரபரணி ஆற்றில் பாண்டியர் கால கட்டிடங்கள் வெளியே தெரிய ஆரம்பித்ததுள்ளது.

இந்த பகுதிக்கு அருகில் தான் பாண்டியர்களின் தலைநகராக இருந்த கொற்கை இருந்துள்ளது.

சங்க காலத்திலேயே கொற்கையை தலைநகராகக் கொண்டு பாண்டிய மன்னர்கள் ஆட்சிபுரிந்து வந்துள்ளனர். இதனை அகனாநூறு, ஐங்குறுநூறு, சிலப்பதிகாரம், சிறுபாணாற்றுப்படை உள்ளிட்ட நூல்கள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

இந்நிலையில் பாண்டியர்களின் தலைநகருக்கு அருகில் உமரிக்காட்டில் காணப்படும் பழங்கால கட்டிடங்கள் அவர்களின் அரண்மனையாகவோ அல்லது நீராழி மண்டபங்களாகவோ இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த கட்டிடங்கள் கருங்கல் மற்றும் செங்கற்களால் கட்டப்பட்டு சுமார் 200 அடி வரை நீண்டு காணப்படுகிறது. எனவே இப்பகுதியை தொல்லியல் துறை முறையாக அகல்வாராய்ச்சி செய்து தமிழர்களின் பண்டைய வரலாறு மற்றும் நாகரீகத்தை கண்டறிய வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்

Exit mobile version