ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் மாடு பிடி வீரர்களுக்கு பரிசோதனை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் மாடு பிடி வீரர்களுக்கு, உடற்தகுதி மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் செய்வதற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தை பொங்கல் திருநாளைத் தொடர்ந்து, மதுரை மாவட்டத்தில், பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு திருவிழா நடைபெறும். மாட்டுப் பொங்கல் திருநாளான, ஜனவரி 16-ம் தேதி, பாலமேட்டிலும், அதற்கு மறுநாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். இவற்றில் கலந்து கொண்டு, காளைகளை அடக்கப்போகும் வீரர்களுக்கு, மாவட்ட நிர்வாகம் உடற்தகுதி மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்கிறது. இந்த வருடம் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள உள்ள மாடு பிடி வீரர்களுக்கு,  வரும் 10 மற்றும் 11-ம் தேதிகளில் இந்தப் பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன. 10-ம் தேதி அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், 11-ம் தேதி பாலமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் இந்தப் பரிசோதனைகள் செய்யப்பட உள்ளது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், 21 வயதுக்கு குறைவானவர்கள், இந்தப் பரிசோதனைகளில் கலந்து கொள்ள முடியாது என்று மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் அறிவித்துள்ளார்.

Exit mobile version