ஜம்மு காஷ்மீரின் முக்கிய இடங்களில் பாகிஸ்தான் படை உதவியுடன் தீவிரவாத அமைப்புகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது, லஸ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட அமைப்பை சேர்ந்த பயிற்சி பெற்ற தீவிரவாத குழுக்கள் இந்திய ஆக்கிரமிப்பு பகுதிகளில் ஊடுருவி தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியான முஷாபராபாத்தில் இதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் உளவுத்துறை தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு காஷ்மீர், சோப்ரே பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடும் இந்திய ராணுவ வீரர்கள் முகாம்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
தெற்கு காஷ்மீர் மற்றும் ஸ்ரீநகர் பகுதிகளில் வரும் நாட்களில் தாக்குதல் நடத்த ஏதுவாக IED வெடிகுண்டுகளை தயாரிக்க ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்புடன் சேர்ந்து தீவிரவாத குழுக்கள் பணியாற்றி வருவதாகவும் உளவுத்துறை தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக்கை ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உமர் அப்துல்லா, ஜம்மு-காஷ்மீரை மூன்று மாநிலமாக பிரிக்கும் எந்த எண்ணமும் தங்களிடம் இல்லை என ஆளுநர் உறுதியளித்ததாக தெரிவித்தார்.