பாகிஸ்தான் உளவுத்துறையை சேர்ந்த 4 பேர், இந்தியாவுக்குள் ஊடுருவியதாகக் கிடைத்த தகவலையடுத்து ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ-யின் ஆள் ஒருவர் உட்பட ஆப்கானிஸ்தான் பாஸ்போர்ட் வைத்துள்ள 4 பேர் இந்தியாவுக்குள் ஊடுருவியதாக உளவுத்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. இவர்கள் எந்த நேரத்திலும் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தக் கூடும் என்பதால் நாடு முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளில் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ராஜஸ்தானின் சிரோகி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அந்த மாவட்டத்தின் அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் கடிதம் அனுப்பி உள்ளார்.
அசாம்பாவித சம்பவங்களை தடுக்க மக்கள் அதிகம் கூடும் இடங்கள், விடுதிகள், பேருந்து நிலையங்களில் சோதனை தீவிரப்படுத்த அவர் அறிவுறுத்தியுள்ளார். சோதனைச்சாவடிகளில் அனைத்திலும், தீவிரச் சோதனைக்குப் பின்னரே வாகனங்களை அனுமதிக்குமாறும் சிரோகி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.