பயங்கரவாத செயல்களை ஒடுக்க மத்திய அரசு புது முயற்சி

ஜம்மு காஷ்மீரில் வன்முறையில் ஈடுபடும் பயங்கரவாதிகளின் அராஜகத்தைக் கட்டுப்படுத்த புதிய படைப்பிரிவு களமிறக்கப்பட்டுள்ளது.

தரைப்படை, கப்பற் படை, விமானப்படை வீரர்களை உள்ளடக்கிய சிறப்பு பிரிவை சேர்ந்த வீரர்கள் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர் அங்கு வன்முறை பரவுவதைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதனால் அங்கு வன்முறை சம்பவங்களும் பயங்கரவாத தாக்குதல்களும் பெருமளவு குறைந்துள்ளன. எனினும் அனைத்து பாதுகாப்பு கெடுபிடிகளையும் மீறி ராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் கூட பாகிஸ்தானிலிருந்து ட்ரோன்கள் மூலம் ஆயுதங்களை கடத்தியதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தரைப்படை, கப்பற்படை மற்றும் விமானப் படை வீரர்களை கொண்ட சிறப்பு படைப் பிரிவு ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிறப்பு நடவடிக்கைக்கான ஆயுதப்படை எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படையில், மார்கோஸ் எனப்படும் கப்பற்படை காமாண்டோக்கள், கருடா என அழைக்கப்படும் விமானப்படை வீரர்கள், தரைப்படை வீரர்கள் இந்த சிறப்பு பிரிவில் இடம்பெற்றுள்ளனர். காஷ்மீரில் வன்முறைக்குப் பெயர்போன உலார் ஏரிப் பகுதியில் விமானப்படை வீரர்களும் கருடா பிரிவைச் சேர்ந்த வீரர்கள் லோலாப் மற்றும் ஹாஜின் பகுதியிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாதிகளின் வயிற்றில் கிலி ஏற்படுத்தும் வகையில் அதிநவீன ஆயுதங்கள், சிறப்பு பயிற்சி, கண்காணிப்பு கருவிகளுடன் சிறப்பு படை களமிறக்கப்பட்டுள்ளது. ராணுவத் தளபதி அசோக் திங்ரா தலைமையில் செயல்பட்டு வரும் இந்த சிறப்பு பிரிவு பயங்கரவாத சம்பவங்களை சிறப்பான முறையில் கையாண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version