தமிழகத்தின் சாதனைச் சரித்திரமாக மாறியவர் பேரறிஞர் அண்ணா

கடமை… கண்ணியம்… கட்டுப்பாடு… என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு, தமிழகத்தின் சாதனைச் சரித்திரமாக மாறியவர் பேரறிஞர் அண்ணா. அவரின் நினைவு நாளான இன்று, தன் தனி வாழ்வில், பொது வாழ்வில், தம்பிகளிடத்தில், அரசியலில், ஆட்சி அதிகாரத்தில், மூச்சில், பேச்சில், எழுத்தில் என அத்தனையிலும் இந்த மந்திரத்தை பேரறிஞர் அண்ணா எப்படிக் கடைபிடித்தார்… என்பதை நினைவு கூர்வதே பொருத்தமாக இருக்கும்.

அண்ணா… தமிழகத்தின் அரசியல் வரலாற்றை திருத்தி எழுதிய சரித்திர நாயகன். தலைசிறந்த கல்வியாளர், மிகச் சிறந்த பேச்சாளர், ஆற்றல்மிகு எழுத்தாளர், தமிழகத்தின் பெர்னாட்ஷா என்று கல்கி போற்றிய கதையாசிரியர், மேடை நாடக நடிகர், ஆங்கில ஏடு நடத்திய பத்திரிகையாளர், தமிழகத்தின் தலைவிதியை மாற்றிய கட்சியின் தலைவர், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் என சரித்திரத்தின் பக்கங்களில் பல முகங்கள் பேரறிஞர் அண்ணாவுக்கு.

நெசவுத் தொழில் செய்த, எளிய குடும்பத்தில் பிறந்த அண்ணா, இத்தனை பெரிய சரித்திர சாதனைகளை படைத்து பேரறிஞர் அண்ணாவானதற்கு, ஊக்கம் கொடுத்தது கடமை… கண்ணியம்…கட்டுப்பாடு… என்ற தாரக மந்திரம்தான். அண்ணா தன் ஒவ்வொரு சொல்லிலும், செயலிலும், இதை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார்.

காஞ்சிபுரம் பச்சையப்பன் பள்ளியில் படித்தபோது, ஓய்வு நேரங்களில், வீட்டில் நடக்கும் நெசவுத் தொழிலுக்கு உதவுவது, சட்டைப் பட்டனுக்கு காஜா எடுப்பது என்று இருப்பார் அண்ணா. கல்லூரியில் படித்த போதே, அரசியல் ஆர்வம் அண்ணாவுக்குள் கொழுந்துவிட்டெறிந்தாலும், மேற்படிப்பை முடிக்கும் வரை கட்டுப்பாடு காத்தார். அதனால்தான், இண்டர் மீடியட் தேர்வில் முதல் மாணவராக அவரால் வெற்றி பெற முடிந்தது. அந்த வெற்றிதான், கல்லூரியில் பி.ஏ.ஹானர்ஸ் படிக்க, பேராசிரியர்களின் உதவியைப் பெற்றுத் தந்தது.

ஜமீன்தார்களும், பண்ணையார்களும், மிட்டா மிராசுகளும் அரசியல் என்பதை பாமர மக்களுக்கு எட்டாக்கனியாக மாற்றி வைத்திருந்த நேரத்தில், சாதாரண வெள்ளை வேட்டை, கலைந்த தலை, சவரம் செய்யாத முகத்துடன், எளிய மனிதனின் தோற்றத்தில் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்தார் அண்ணா. அப்படி வந்த அவரை, அவரின் அடுக்குமொழிப் பேச்சும், மணிப்பிரவாள எழுத்தும் மட்டும் அவரை அரசியலில் உயர்த்தவில்லை. கட்சிக் கடமைகளில் காட்டிய கறார்… கட்சித் தொண்டர்களிடம் காட்டிய கண்ணியம்… கட்சிக்குள் காட்டிக் காத்த கட்டுப்பாடுதான் அவரைத் தலைவராக உயர்த்தியது.   

நீதிக்கட்சியில் இருந்த அண்ணா, சென்னை மாநகராட்சித் தேர்தலில் பெத்துநாயக்கன் பேட்டை வேட்பாளராகப் போட்டியிட்டார். தேர்தல் முடிவுகள் வந்தபோது, அண்ணாவைக் காணவில்லை. அவர், பட்டினத்தார் திரைப்படம் பார்க்கச் சென்றுவிட்டார். அதுபற்றி அவரிடம் கேட்டபோது, தேர்தலில் போட்டியிடுவதும், வெற்றிக்காக பாடுபடுவதும் நம் கடமை. அதைச் செய்தாகிவிட்டது. அதற்குப்பிறகு வரும் முடிவுகள் மக்கள் கொடுப்பது. அதை அப்படியே ஏற்றுக்கொண்டு கட்டுப்பாடு காக்க வேண்டும் என்றார் அண்ணா.

நீதிக் கட்சியில் இணைந்து, பெரியாரின் நம்பிக்கைகுரிய தளபதியாக உயர்ந்த அண்ணாவிடம், கழகத்தின் பெட்டிச் சாவியை ஒப்படைப்பதாக பெரியார் சொன்னார்.  சேலம் மாநாட்டில் பெரியார் அப்படிச் சொன்னபோது, சாவி என்னிடம் இருந்தாலும், பெட்டியில் உள்ள பொருள்கள் பெரியாருக்கே எப்போதும் சொந்தம் என்றார்.

பிறகு, இருவருக்குள்ளும் முரண்பாடுகள் முற்றி, அண்ணா தனிக் கட்சியைத் தொடங்கினார். 1949-ல் சென்னை ராபின்சன் பூங்காவில், தி.மு.க-வைத் தொடங்கிய அண்ணா, அப்போதும் பெரியாரைத் தாக்கவில்லை. குறை சொல்லவில்லை. குற்றம் சுமத்தவில்லை. மாறாக, தி.மு.க-வில் தலைவர் பதவியைக் காலியாக வைத்து, அந்த நாற்காலி பெரியாருக்கே சொந்தம் என்று சொல்லி பெரியாரைப் இன்னும் அதிகமாகப் பெருமைப்படுத்தினார்.

கட்சியில் எல்லாப் பதவியும் தன்னிடமும், தன் குடும்ப வாரிசுகளிடம் மட்டுமே இருக்க வேண்டும் என அண்ணா ஒரு நாளும் கருதவில்லை. மாறாக, எளிய குடும்பத்தில் இருந்து வரும் தம்பிகளை, ஆற்றல் மிகுந்த தலைவர்களாக உருவாக்கினார். நெடுஞ்செழியன், ஈ.வே.கி.சம்பத், எம்.ஜி.ஆர்,மதியழகன், அன்பழகன், கண்ணதாசன், எஸ்.எஸ்.ஆர் என பல பேரை உருவாக்கித் தலைவன் என்ற தன் கடமையை சரிவரச் செய்த அண்ணா, தன் வாரிசுகள் யாரும் கட்சிக்குள் நுழைந்து ஆதிக்கம் செலுத்த கடைசி வரை அனுமதிக்கவில்லை. அதில் கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் கடைபிடித்தார்.

அண்ணாவின் தி.மு.க தமிழகத்தில் வேகமாக வளர்ந்து கொண்டிருந்த நேரத்தில்,  அந்தக் கட்சியின் அதிகாரமிக்க பொதுச் செயலாளர் பதவியை நெடுஞ்செழியனிடம் ஒப்படைத்தார். இது கட்சி ஜனநாயத்தில் அண்ணா கட்டிக்காத்த கண்ணியத்துக்கு மிகச் சிறந்த உதாரணம்.

அண்ணாவின் கட்டுப்பாட்டில் வளர்ந்தாலும், எப்போதும் கழகத்துக்குள் கலகமூட்டுவதையே வேலையாக வைத்திருந்த கருணாநிதியும், ஈ.வே.கி சம்பத்தும் பொதுச் செயலாளர் பதவியைக் கைப்பற்ற முட்டி மோதிக் கொண்டனர். இதனால், கட்சிக் கட்டுப்பாடு கெடும் என நினைத்த அண்ணா, பொதுச் செயலாளர் பொறுப்பை மீண்டும் அவரே எடுத்துக் கொண்டு, தன் கடமையை நிறைவேற்றினார்.

இந்தியா-சீனா போர் மூண்டபோது, காங்கிரஸ் கட்சியோடு இருந்த முரண்பாடுகள் அனைத்தையும் ஒதுக்கிவிட்டு, மத்திய அரசை முழுமையாக ஆதரித்தார் அண்ணா. ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தை காமராஜர் ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்தார். அதைப் பாராட்டிய அண்ணா, அடுத்து வந்த தேர்தலில் காமராஜர் போட்டியிட்ட குடியாத்தம் தொகுதியில், தி.மு.க வேட்பாளரை நிறுத்தாமல், காமராஜரைப் பெருமைப் படுத்தினார். இது இந்திய அரசியல் என்றும் கண்டிராத அதிசயம்.

1967-ல் அண்ணாவின் தி.மு.க பெற்ற வெற்றிக்கு எம்.ஜி.ஆர் மிகப்பெரிய காரணமாக இருந்தார். அதைக் குறிப்பிடும் வகையில், எம்.ஜி.ஆர் என்ற கனி யார் மடியில் விழும் என்று எல்லோரும் ஏங்கியபோது, அந்தக் கனி என் மடியில் விழுந்தது. அதை எடுத்து என் இதயத்தில் வைத்துக் கொண்டேன் என்றார் அண்ணா.

1967-ல் மொழிப்போர் வெடித்தபோது, மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். அவர்கள் மீது துப்பாக்கிச்சூட்டை நடத்தியது அப்போதைய காங்கிரஸ் அரசாங்கம். அதில், வேதனையடைந்த அண்ணா, மாணவர்கள் போராட்டத்தை கட்சிகளிடம் ஒப்படைத்துவிடுங்கள் என்று கோரிக்கை வைத்தார். மாறாக, எப்படியாவது வெறியாட்டைத்தை நடத்தி போராட்டத்தி வெற்றி பெறச் செய்தால் போதும் என்று அவர் நினைக்கவில்லை.

1967 தேர்தலில் வெற்றி பெற்று, முதலமைச்சராவதற்கு முன்பு, திருச்சியில் இருந்த பெரியாரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். இத்தனைக்கும் அந்தத் தேர்தலில் திமுக-வை எதிர்த்து பெரியார் பிரசாரம் செய்திருந்தார். ஆனாலும், தன் தலைவருக்கு செய்ய வேண்டிய மரியாதையில் சிறு கண்ணியக் குறைவும் ஏற்படாதவாறு நடந்து கொண்டார் அண்ணா.

சென்னையில் இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்திய அண்ணா, மாற்றுக் கட்சி, மாற்று சிந்தனை கொண்டவர்களை மேடையில் அமரவைத்து அழகுபார்த்தார். ராஜாஜி, பக்தவச்சலம், காமராஜரை இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு மேடையில் அமரவைத்துப் பெருமைப்படுத்தினார்.

கடமை… கண்ணியம்… கட்டுப்பாடு என்பதை தன் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்த அண்ணா, அதைத் தன் கோடிக்கணக்கான தம்பிமார்களும் கடைபிடிக்க வேண்டும் என விரும்பினார். அண்ணா உருவாக்கிய திமுக-வைக் கைப்பற்றிய மு.க கும்பல், அண்ணாவின் விருப்பத்தை எப்போதோ கொன்றழித்து குழியில் போட்டு மூடிவிட்டது. ஆனால், அண்ணாவின் வழியில் உருவாக்கப்பட்ட அ.தி.மு.க-வின் தொண்டர்கள், எத்தனை இடர்ப்பாடுகள் வந்தாலும், அண்ணா கற்றுக் கொடுத்த கடமை… கண்ணியம்… கட்டுப்பாடு… என்ற கோட்பாட்டில் இருந்து என்றும் விலகாமல் பயணிப்போம் என உறுதியேற்பதை, அண்ணாவின் நினைவு நாளில் அவருக்குச் செலுத்தும் ஆத்மார்த்தமான அஞ்சலி!

Exit mobile version