டெரகொட்டா என்று சங்க காலத்தில் அழைக்கப்படும் சுடுமண்ணில் செய்யப்பட்ட சிற்பங்கள், மண்பாண்டங்கள் போன்றவற்றை தமிழர்கள் அன்றைக்கு அதிகமாக பயன்படுத்தினர். தமிழர்கள் சுடுமண் சிற்பங்களுக்கு என தனி சிறப்பினை செலுத்தி வந்துள்ளார்கள். முக்கியமாக சமீபத்தில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் டெரகோட்டா அகல் விளக்குகள் கிடைத்திருந்தன. பிறகு இதே மாதிரியான அகல்விளக்குகள் புதுச்சேரியில் உள்ள அரிக்கமேடு பகுதியிலும் அதிக அளவு கிடைத்துள்ளன. ஆனால் தற்போது கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தென்பெண்ணை ஆற்றினையொட்டி இந்த சங்ககால டெரகோட்டா வகை அகல்விளக்குகள் கிடைத்துள்ளன.
தொல்லியல் அறிஞர் சி இம்மானுவேல் மற்றும் விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் வரலாற்றுத் துறை பேராசிரியர் ரமேஷ் ஆகியோரின் கூட்டு முயற்சியில் பண்ருட்டியின் அருகே உள்ள எனதிரிமங்கலம் எனும் ஊரில் தென்பெண்ணை ஆற்றுப்படுகையில் அகழாய்வு நிகழ்த்தப்பட்டது. அவ்வகழ்வாய்வில் வெவ்வேறு வடிவிலான கையால் செய்யப்பட்ட சங்ககால அகல்விளக்குகள் கிடைத்தன. தொல்லியலாளர் இம்மானுவேல், இவ்விளக்குகளை டெரகோட்டா வகையிலான சிவப்பு மற்றும் கருப்பு நிற விளக்குகள் என்று கூறினார். மேலும் கூறிய அவர், இந்த விளக்குகள் நிச்சயமாக சங்ககாலத்தைச் சேர்ந்தவையாக தான் இருக்க முடியும் என்று கூறினார். கீழடியிலும், அரிக்கமேட்டிலும் கண்டெடுக்கப்பட்ட அகல்விளக்குகளின் காலமும் இதன் காலமும் ஒற்றுமையாக உள்ளது என்று கூறிய அவர், இந்த விளக்குகள் நீண்ட நேரத்திற்கு வெளிச்சத்தினை தரக்கூடியதாக இருந்தது என்றும் தெரிவித்தார்.