அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள மஹா புயல் காரணமாக தென் தமிழகம், கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது
தீவிரப் புயலாக உருவெடுத்துள்ள மஹா, மத்திய கிழக்கு அரபிக்கடலில் மணிக்கு 17 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. லட்சத்தீவுகளிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ள மஹா புயல், அடுத்த 12 மணி நேரத்திற்கு அதி தீவிர புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென்தமிழகம், லட்சத்தீவு, கேரளா, கடலோர மற்றும் உள் கர்நாடகா பகுதிகள், ராயலசீமாவில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வரும் 3ம் தேதி வங்கக் கடலில் அந்தமான் தீவுகளுக்கு அருகே புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுநிலை அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்படும் எனவும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.