தென்கொரியாவில் உள்ள தொடர்பு அலுவலகத்தை வடகொரியா ஏவுகணை வீசி தரைமட்டமாக்கிய மூலம் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது. ஒப்பந்தத்தை மீறி எல்லையில் வடகொரியா ராணுவத்தை குவித்து வருவதால் போர் மூளும் அபாயம் உருவாகியுள்ளது. இரண்டாம் உலகப் போர் முடிவில் கொரிய தீபகற்பம் வடகொரியா, தென் கொரியா என பிரிந்தது முதல் இருநாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனால் கொரிய தீபகற்பம் பதற்றமான சூழலுக்கு தள்ளப்பட்டது. கடந்த 2011ம் ஆண்டு வடகொரியா அதிபராக கிம் ஜாங் உன் பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், அன்று முதல் இருநாடுகளுக்கு இடையேயான மோதல் போக்கு மேலும் தீவிரமடைந்தது… 2018ம் ஆண்டு தென்கொரியாவில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியால் இருநாடுகளுக்கு இடையே இணக்கமான சூழல் தென்பட்ட நிலையில் அது ஓராண்டு கூட நீடிக்கவில்லை.. அமெரிக்காவோடு தென்கொரியா நெருக்கமாக இருப்பது வடகொரியாவுக்கு ஆத்திரத்தை மூட்டியது… கடந்த ஆகஸ்டில் தென் கொரியாவுடன் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அறிவித்திருந்தார் கிம் ஜாங் உன் … இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் பதற்றமான சூழல் வெடித்தது. ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளக்கூடாது என்ற வரையறுக்கப்பட்ட கொரிய எல்லைப் பகுதிகளில் வடகொரியா, தென்கொரியா ராணுவ வீரர்கள் மே 4ம் தேதி மோதிக்கொண்டனர். அப்போது வடகொரிய அதிபரை விமர்சிக்கும் பிரசுரங்கள் அடங்கிய பலூன்கள் பறக்கவிடப்பட்டது கிம் ஜாங் உன்னுக்கு ஆத்திரத்தை மூட்டியது. தங்கள் நாட்டில் இருந்து தப்பிய சிலர் தென்கொரியாவில் இருந்துகொண்டு துண்டுப் பிரசுரங்கள் மூலமாகத் தங்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து வருவதாக வடகொரியா குற்றம் சாட்டியது. மேலும், கிம் ஜாங் உன் மற்றும் அவரது ஆட்சியை விமர்சிக்கும் வகையில் சிலர் தென் கொரியாவில் இருந்து ஹீலியம் பலூன்களைப் பறக்கவிடுவதாகவும், வடகொரியாவின் சில ரகசியத் தகவல்கள் தென்கொரியா வாயிலாகக் கசிவதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வடகொரியா சுமத்தியது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கொரிய எல்லையில் ராணுவம் விலக்கப்பட்ட பகுதிக்குள் நுழைவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு வடகொரிய ராணுவத்திற்கு உத்தரவிட்டார் கிம் ஜாங் அன்னின் சகோதரி கிம் யோஜோங். எல்லையை நோக்கி வடகொரிய ராணுவம் முன்னேறி வந்த அதே வேளையில், தென்கொரியா எல்லையில் கேசாங் நகரில் அமைந்துள்ள இருநாட்டுக்கான தகவல் தொடர்பு அலுவலகத்தை ஏவுகணை மூலம் தரைமட்டமாக்கியது வடகொரியா. அத்துடன் தென் கொரியாவுடனான அனைத்து உறவுகளையும் முறித்துக் கொள்வதாக அதிரடியாக அறிவித்தது. தகவல் தொடர்பு அலுவலகம் தகர்க்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தென்கொரியா அதிபர் மூன் ஜே இன், இது முட்டாள்தனமான செயல் என்று விமர்சித்திருந்தார். மூத்த பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையும் நடத்திய தென் கொரிய அதிபர், இருநாடுகளுக்கு இடையேயான பதற்றத்தைத் தணிக்க பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், இதனை வடகொரியா நிராகரித்தது. தென்கொரிய அதிபரின் நடவடிக்கை எந்த இனம் என்று தெரியாத கலப்பின நாய் போன்று இருப்பதாக வடகொரியா அதிபரின் சகோதரி கிம் யோஜோங் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். இதனிடையே, படைகள் விலக்கப்பட்ட எல்லைப்பகுதிகளில், ஒப்பந்தத்தை மீறி படைகளை குவிக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ள வடகொரியா, போர் ஒத்திகை நிகழ்வுகளையும் தொடங்கியுள்ளது. அதே வேளையில் எல்லையில் ஆத்திரமூட்டும் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று தென் கொரியா தரப்பில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.