தென்காசி அடுத்த கொட்டாகுளத்தைச் சேர்ந்த வினித்தும், செங்கோட்டை பிரானூரைச் சேர்ந்த கிருத்திகா பட்டேலும் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில், கிருத்திகா பட்டேல் கடத்தப்பட்டார். அவரது பெற்றோரே கடத்திச் சென்றதாக வினித் புகார் அளித்த நிலையில் 7பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இந்த நிலையில் தன்னை யாரும் கடத்தவில்லை, தனக்கு திருமணம் ஆகிவிட்டது, இந்தப் பிரச்சனையை இத்தோடு விட்டுவிடுங்கள் என்று கூறி கிருத்திகா பேசிய வீடியோ வெளியானது.
ஆனால், தனது மனைவியை கட்டாயப்படுத்தி பேசச் செய்திருப்பதாக வினித் தெரிவித்திருந்தார். இந்த கடத்தல் சம்பவத்தின் அடுத்த திருப்பமாக, தற்போது கிருத்திகா பட்டேல், வினித்திடம் போனில் பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது. அந்த ஆடியோவில் தான் நலமாக இருப்பதாகவும், வழக்கை வாபஸ் பெறுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் வழக்கை வாபஸ் பெறுவதுதான் வினித்துக்கும் அவரது பெற்றோருக்கும் நல்லது என்றும் அந்த ஆடியோவில் கூறப்பட்டுள்ளது.
நண்பர் வீட்டில் இருப்பதாகவும், அவரது செல்போனில் பேசுவதாகவும் கூறப்படும் அந்த ஆடியோ பதிவு, கிருத்திகா நேரில் வரவேண்டும் என்று வினித் பேசுவதுபோல் முடிந்துள்ளது. இந்த ஆடியோ பதிவில் பேசுவது கிருத்திகாதானா என்று, அவ்வப்போது வினித் கேட்பது போல, பெண் கடத்தப்பட்டு ஒருவாரத்துக்கு மேலாகி, வீடியோவும் ஆடியோவும் வெளியாகும் நிலையில் இன்னமும் போலீசார் தேடிக்கொண்டே தான் இருக்கிறார்களா என்றும் கேள்வி எழுந்துள்ளது.