மணிப்பூர் விவகாரத்தைக் கண்டித்து திமுக மகளிர் அணியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது, திமுகவில் பெண்களுக்கு வழங்கப்படும் மரியாதை என்ன என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு திமுக மகளிர் அணி சார்பாக மணிப்பூர் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளரும், சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கண்டன உரையாற்றினார். அப்போது, மேடையில் இருந்த மகளிர் அணி நிர்வாகி தமிழ்ச்செல்வி, “தென்காசி மாவட்ட திமுகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இந்த லட்சணத்தில் நீங்கள் மணிப்பூர் சம்பவத்தைக் குறித்து பேச வேண்டாம்” எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வெட்ட வெளியில் கட்சி மானம் பறிபோவதைக் கண்ட நிர்வாகிகள் உடனடியாக அவரிடம் இருந்து மைக்கைப் பிடுங்கி அவரை மேடையை விட்டு அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். விடாத தமிழ்ச்செல்வி தொடர்ந்து கட்சி நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் தமிழ்ச்செல்வியிடம் இருந்து நைசாக மைக்கைப் பிடுங்கிய நிர்வாகிகள் கூட்ட மேடையில் இருந்து அவரை அப்படியே ஓரங்கட்டி பின்னுக்குத் தள்ளினர்.
சமத்துவம் பேசும் திமுகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என நிர்வாகி ஒருவரே முன்வந்து பொதுவெளியில் பேசியிருப்பது திராவிடமாடலின் சமத்துவத்தை கேள்விக்கு உள்ளாக்கி உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் ஏற்கனவே தெற்கு, வடக்கு என பிரிந்து கட்சி நிர்வாகிகள் சண்டையிட்டு வரும் நிலையில், ஆர்ப்பாட்ட மேடையிலேயே பெண் நிர்வாகி ஒருவர் தனது மனக்குமுறலை வெளிப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுப் பிரச்சனையை பேச வந்த இடத்தில் கட்சி மானம் கப்பலேறிய சம்பவத்தால் திமுக நிர்வாகிகள் செய்வதறியாது புழுவைப் போல நெளிந்து கொண்டிருந்ததைப் பார்த்து பொதுமக்கள் கேலி செய்தனர்.
Discussion about this post