இந்தியாவில் 3 இடங்களில் ஏழுமலையானுக்கு கோவில் கட்ட முடிவு

ஜம்மு காஷ்மீர், மும்பை, வாரணாசியில் ஏழுமலையானுக்கு கோவில் கட்ட, திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் ஆலோசனை கூட்டம் திருப்பதியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி, வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு, இரண்டு நாட்கள் மட்டுமே ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட வாசல் திறந்திருக்கும் என்றார். ஏழுமலையான் கோவில் வைகுண்ட வாசலை 10 நாட்கள் திறந்து வைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், இதுபற்றி அடுத்த ஆண்டு முடிவு செய்யப்படும் எனக் கூறினார். மும்பையில் 30 கோடி ரூபாய் செலவில் ஏழுமலையானுக்கு கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுப்பாரெட்டி தெரிவித்தார். உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசி மற்றும் ஜம்மு காஷ்மீரிலும் ஏழுமலையானுக்கு கோவில் கட்ட நிலம் ஒதுக்க கோரி அந்த மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்ப முடிவு செய்யப் பட்டுள்ளதாகவும் சுப்பாரெட்டி கூறினார். தொடர்ந்து பேசிய அவர், 2019-20ஆம் ஆண்டிற்கான தேவஸ்தான பட்ஜெட் 3 ஆயிரத்து 116 கோடியே 25 லட்சத்தில் இருந்து, 3 ஆயிரத்து 243 கோடியே 19 லட்சம் ரூபாயாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Exit mobile version