திருப்பதி கோயில் பிரமோற்சவத்தின் 3வது நாளில் முத்து பந்தல் வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவத்தையொட்டி கடந்த 30ஆம் தேதி தங்க கொடிமரத்தில் வேத மந்திரங்கள் முழங்க பிரமோற்சவ கொடி ஏற்றப்பட்டது. பிரமோற்சவத்தின் 3வது நாளில் யோக நரசிம்மர் அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வீதி உலாவின் போது கேரள செண்டை மேளம், நாதஸ்வரம், மும்பை டிரம்ஸ் மேளம், மற்றும் பக்தர்களின் கோலாட்டம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முத்து எப்படி பரிசுத்தமானதோ அதை போன்று நம் மனதில் தீய எண்ணங்கள் இன்றி பரிசுத்தமாக இறைவனை அடைய வணங்கினால் முக்தி பெறலாம் என்பதை விளக்கும் வகையில், முத்து பந்தல் வாகனத்தில் மலையப்ப சுவாமி தாயார்களுடன் அருள் பாலித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.