காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் அமைந்துள்ள சனீஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டி நடைபெற்ற அடியார்கள் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
திருநள்ளாறில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற சனீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெறுகிறது. இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 24ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் சிறப்பாக தொடங்கியது.
தர்பாரண்யேஸ்வரர், பிரணாம்பிகை, செண்பக தியாகராஜர், சனீஸ்வரர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு தினந்தோறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக 64 நாயன்மார்களில் நால்வர் என்றழைக்கப்படும் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. நால்வரும் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.