தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயிலில் கள்ளர்வெட்டு திருவிழா

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள கற்குவேல் அய்யனார் கோயிலில், பிரசித்தி பெற்ற கள்ளர்வெட்டு திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

திருச்செந்தூர் அருகே தேரிக்குடியிருப்பில் உள்ள கற்குவேல் அய்யனார் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலில் கள்ளர்வெட்டு திருவிழா ஆண்டு தோறும் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான கள்ளர்வெட்டு திருவிழா கடந்த மாதம் 17-ம் தேதி தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளர்வெட்டு, நேற்று நடைபெற்றது. இதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் தேரிக்குடியிருப்பில் கூடியினர். கள்ளர்வெட்டு நிகழ்ச்சியின் போது இளநீரை கள்ளராக பாவித்து, அதன் மீது குங்குமத்தை வைத்து அரிவாளால் வெட்டுவார்கள். அப்போது அதிலிருந்து வெளியாகும் தண்ணீர், தேரிமணல் மீது விழும். அந்த மண்ணை எடுத்து, வியாபார ஸ்தலங்களில் வைத்து வழிபட்டால் செல்வம் சேரும் என்பதும், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தேரிமணலை எடுத்து உடலில் பூசினால் நோய் குணமாகும் என்பதும் ஐதீகம். அதனால் தேரிமணலை அங்கு கூடியிருந்த பக்தர்கள் முண்டியடித்து எடுத்து சென்றனர்.

Exit mobile version