ராயல் என்ஃபீல்டு புல்லட்டுக்கு கோவில் இருக்கு.. எங்க தெரியுமா?
இன்றைய இளசுகள் மத்தியில் ராயல் என்ஃபீல்டு புல்லட்டுக்கள் மிகப்பிரபலம். அதுவும் புல்லட்டை எடுத்துக்கொண்டு லாங் டிரைவ் செல்ல பலரும் விரும்புகிறார்கள். அதற்காகவே பல்வேறு குழுக்கள் தனிய்க இயங்கி வருகின்றன. அந்த குழுக்கள் மூலம் வார இறுதி நாட்களில் மலைப்பிரதேசங்களில் ஜெர்கின் மாட்டிக் கொண்டு கலர்கலராக புல்லட்டுகளில் பலர் பறப்பதை நாம் கண்கூடாக பார்க்க முடியும். ஒரு புறம் நம் இளம்தலைமுறையினர் புல்லட்களை வாங்கிக் குவிக்க, மற்றொரு புறம் ராஜஸ்தானில் ஒரு ராயல் என்ஃபீல்டு புல்லட்டுக்கு கோவில் கட்டி வழிபடுகின்றனர் ஒரு கிராம மக்கள்.ஜோத்பூரில் இருந்து 40 கிமி தூரத்தில் உள்ள பந்தயி கிராமத்தில் பன்னா என்பவர் 1991 ஆம் ஆண்டு வாழ்ந்து வந்திருக்கிறார். அவர் வைத்திருந்தது 350cc என்ஃபீல்டு புல்லட் RNJ 7773.. ஒரு முறை சாலையில் பயணம் செய்த போது பங்கடி என்ற இடத்தில் நிலைதடுமாறி மரத்தில் மோதி நினைவிழந்து உயிரிழந்து விட்டார். அவருடைய புல்லட் அங்கிருந்த சாக்கடையில் விழுந்துவிட்டது. இதுபற்றி விசாரணை நடத்திய காவல்துறை சாக்கடையில் விழுந்த அந்த புல்லட்டை எடுத்து கொண்டு அங்கிருந்த காவல்நிலையத்தில் நிறுத்தி உள்ளனர். ஆனால் மறுநாள் காவல்நிலையத்தில் அந்த புல்லட் இல்லை. எங்கே என்று அனைவரும் தேட பன்னா உயிரிழந்த அதே இடத்தில் அந்த புல்லட் வண்டி நின்றிருந்தது. மீண்டும் காவல்துறையினர் அந்த புல்லட்டை அங்கிருந்து எடுத்து கொண்டு போய் காவல்நிலையத்தில் வைத்து பெட்ரோலை காலியாக்கி பூட்டு போட்டு நிறுத்தி வைத்துள்ளனர். மறுநாளும் அந்த புல்லட் காவல்நிலையத்தில் இருந்து மாயமானது. மீண்டும் தேடிப்போனால் விபத்து நடந்த இடத்தில் அந்த புல்லட் நின்றிருந்ததாம். இதுபோன்று பல்வேறு முறை நடக்க இறந்து போன பன்னாவின் ஆவி தான் அந்த புல்லட்டில் இருப்பதாக நினைத்து விபத்து நடந்த இடத்திலேயே பன்னாவின் புல்லட்டுக்கு கோவில் எழுப்பி உள்ளனர்.
வீட்டில் இருந்து தூரப்பயணமாக கிளம்பும்போது அந்த புல்லட் கோவிலுக்கு வந்து வழிப்பட்டு செல்கின்றனர் பந்தயி கிராம மக்கள். இதனால் தங்கள் பயணம் பாதுகாப்பாகவும் இருப்பதாக நம்புகின்றனர். பன்னாவின் புல்லட் நன்றாக அலங்கரிக்கப்பட்டு சுற்றிலும் கண்ணாடி பேழைகள் வைத்து அனைவரும் காணும் விதமாக இந்த கோவில் உள்ளது. புல்லட் பிரியர்கள் ராஜஸ்தான் போனால் இந்த புல்லட் கோவிலுக்கும் போக மறந்துவிடாதீர்கள்.