முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எம்ஜிஆர் கல்வி ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் இன்று கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.கவுரவ டாக்டர் பட்டம் பெற உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தெலங்கானா ஆளுநர் தமிழசை செளந்தரராஜன் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நிகர்நிலைப் பல்கலைக்கழகமான டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 28ஆவது பட்டமளிப்பு விழா சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் இன்று நடைபெறுகிறது. இந்தப் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.
பாதுகாப்பு ஆராய்ச்சி வளர்ச்சி அமைப்பின் தலைவர் சதீஷ் ரெட்டி, கங்கா மருத்துவமனைத் தலைவர் ராஜசபாபதி, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், நடிகையும், பரத நாட்டியக் கலைஞருமான ஷோபனா ஆகியோருக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்க்கை வரலாறு குறித்த படக் காட்சி திரையிடப்படுகிறது. பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்திப் பட்டங்கள் பெற்றவர்களுக்குச் சான்றிதழ்களையும், தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்தவர்களுக்குப் பதக்கங்களையும் வழங்குகிறார்.
இதனை தொடர்ந்து கவுரவ டாக்டர் பட்டம் பெற உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தெலங்கானா ஆளுநர் தமிழசை செளந்தரராஜன் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் சவாலான சூழ்நிலையில் ஆட்சி பொறுப்பேற்று சாமான்ய மக்களின் தேவைகளை தீர்க்கும் விதமாக பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வரும் முதலமைச்சருக்கு, கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.