தெலங்கானாவில் பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது சிறுவனை, 12 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேடக் மாவட்டத்தில் உள்ள போட்சன்பள்ளி கிராமத்தில், 120 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில், சாய் வர்தன் என்னும் 3 வயது சிறுவன் தவறி விழுந்தான். சாய் வர்தன் அவனது பெற்றோருடன் நேற்று மதியம் வயலுக்கு சென்றிருந்தான். மாலை 5 மணியளவில் வீடு திரும்பும் போது ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துவிட்டான்.
சிறுவனின் தந்தை மங்கலி பிக் ஷாபதி தங்களது வயலில் தண்ணீருக்காக தோண்டிய 2 ஆழ்துளை கிணறுகளை மூட திட்டமிருந்த நிலையில், அவர்களது சொந்த மகனே தற்போது ஆபத்தில் சிக்கியுள்ளான். சிறுவன் கண் முன்னே ஆழ்துளை கிணற்றில் விழுந்ததை பார்த்த தாய் நவீனா, தனது புடவையை கொண்டு குழந்தையை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் புடவையை பிடிக்கும் ஆழத்தை கடந்து சிறுவன் கீழே சென்றுவிட்டான்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட துவங்கினர். காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் உள்ளிட்டோர் போட்சன்பள்ளிக்கு விரைந்து வந்தனர். சிறுவன் இருக்கும் ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் மற்றொரு ஆழ்துளை கிணறு தோண்டும் பணி, 12 மணி நேரம் நடைபெற்றது. 12 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.