புது வகையான சோடாக்கள், ஐஸ்கீரிம் தயாரிப்புகளை தயாரித்து விற்கும் இளம்பெண்!

விதவிதமான கோலி சோடாக்கள் முதல் ஐஸ்கீரிம் பலூடா வரை எப்படி செய்வது என்று யூ-டியுப் மூலம் கற்றுக் கொண்டு, புதுமையான முறையில் சோடா கடை நடத்தி வருகிறார், மதுரையைச் சேர்ந்த இளம் பெண் சூர்யா.

கலர் கலரான சோடாக்கள்… விதவிதமான ஐஸ்கீரிம்கள்… என பெண்கள், குழந்தைகள் உட்பட அனைவரையும் ஈர்க்கிறது மதுரையில் சூர்யா என்ற இளம்பெண் நடத்தும் சோடாக்கடை. மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த பட்டதாரிப் பெண் சூர்யா. கடந்த 2018-ஆம் ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பை முடித்த சூர்யாவுக்குத் திருமணமாகிவிட்டது. அதையடுத்து தன் சொந்த உழைப்பில் முன்னேற முடிவெடுத்த சூர்யா, தன் உறவினர் ஒருவர் வைத்திருந்த சோடாக் கடையை எடுத்து நடத்த முடிவு செய்தார். வழக்கமான பழைய பாணியில் சோடாக்கடையை நடத்தாமல், அதில் புதுமையைப் புகுத்த விரும்பிய அவர், யூ-டியூப் மூலமாக புதியவகை சோடா குளிர்பானங்கள் பற்றியும், அவற்றின் தயாரிப்பு முறைகள் குறித்தும் தெரிந்து கொண்டார். உணவுத்துறையில் பட்டப்படிப்பு முடித்த அவரது தோழிகளிடம் ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டு, சோடாக் கடையைத் தொடங்கினார்.

இயற்கை எழில் நிரம்பிய மதுரை லேடி டோக் கல்லூரி சாலையில், மர நிழலில் சூர்யாவின் சோடா கடை செயல்படத் தொடங்கியது. அதில், நோய் எதிர்ப்பு சக்தி பொருட்களால் ஆன எலுமிச்சை, புதினா, இஞ்சி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட கோலி சோடா, புல்ஜார் சோடா, பால் சர்பத், பூஸ்ட் மொஜிட்டோ, பலூடா ஐஸ்கிரீம் என பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைவரையும் கவரும் வகையிலான சோடாக்களை அறிமுகம் செய்து விற்பனை செய்துவருகிறார்

காலை 7 மணி முதல் மாலை மாலை 7 மணி வரை சூர்யாவின் புதுமையான சோடா கடை இயங்குகிறது. ஆயிரக்கணக்கானோர் வந்துபோகும் அந்தச் சோடக் கடையை, தனியாளாக நின்று, இன்முகத்தோடு அனைவரையும் வரவேற்று, வெற்றிகரமாக நடத்தி வருகிறார் சூர்யா. அவர்களிடம் ஒவ்வொரு சோடாவின் சிறப்புக்கள் குறித்து, தயக்கமின்றி எடுத்துக்கூறி வியாபாரம் செய்கிறார்.

குழந்தைகள் விரும்பும் வகையிலான வித விதமான ஐஸ்கீரீம்களையும் நாட்டுசர்க்கரையை பயன்படுத்தி வழங்கிவருகிறார். மேலும் கொரோனா காலங்களில் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு முக கவசங்கள்
சமூக இடைவெளி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

Exit mobile version