தமிழகம் முழுவதும் மீண்டும் பணிக்கு திரும்பிய ஆசிரியர்கள்

தமிழகம் முழுவதும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களில் 97 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி விட்டதாக மாநில பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மொத்தமுள்ள 2 லட்சத்து 13 ஆயிரத்து 758 ஆசிரியர்களில் பெரும்பாலோனோர் வருகை தந்திருப்பதாக கூறியுள்ளார்.

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களில் 4 பேரை தவிர மற்றவர்கள் பணிக்கு திரும்பி விட்டதாக முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,போராட்டத்தில் ஈடுபட்ட 99 புள்ளி 9 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு வந்து விட்டதாகவும் பணிக்கு வராதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என  அவர் கூறினார்.

தேனியில், உள்ள 771 பள்ளிகளில் மொத்தம் உள்ள 6 ஆயிரத்து 724 ஆசிரியர்களில், 3 ஆயிரத்து 200 ஆசிரியர்கள் மட்டும் பணிக்கு வந்தநிலையில் தற்போது ஆசிரியர்களின் வருகை அதிகரித்து வருவதால் பணிக்கு வரும் ஆசிரியர்களின் வருகை சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து தெரிவித்துள்ளார். ஆசிரியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க 500க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பகுதியிலும், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியிலும் 99 சதவீத ஆசிரியர்கள் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளனர். போராட்டத்தை கைவிட்டு, ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியதை, பெற்றோர்கள், மாணவர்கள் வரவேற்றுள்ளனர். 

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த பெரும்பாலான ஆசிரியர்கள், மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளனர். இருப்பினும் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடாமல் பாடம் நடத்தி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டத்தில் உயர்நிலை,மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 100 சதவீதம் பணிக்கு திரும்பி உள்ளதாக மாநில கல்வியியல் துறை இணை இயக்குநர் பொன்குமார் தெரிவித்துள்ளார். தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் காலிப் பணியிடங்களுக்கு வேறு ஆசிரியர்களை நியமிக்க மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருவதாகவும், திட்டமிட்டபடி 12ம் வகுப்பு செய்முறை தேர்வு நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோவையில் மொத்தமுள்ள ஆசிரியர்களில் 320 பேர் மட்டுமே இதுவரை பணிக்கு வரவில்லை என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யணன் கூறியுள்ளார். இன்று தாமதமாக வரும் ஆசிரியர்களையும் அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், காலியாக உள்ள  பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version