தேசிய ஆசிரியர் தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படும் நிலையில் பல்வேறு தரப்பினரும் ஆசிரியர்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5ம் நாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், ஆசிரியர்களுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் பல்வேறு தரப்பினரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தேசிய அளவில் சிறப்பாக பணியாற்றிய 46 ஆசிரியர்களுக்கு இன்று நல்லாசியர் விருது வழங்கப்படுகிறது. இதேபோல் தமிழக அரசின் சார்பிலும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நல்லாசியர் விருதுகள் வழங்கப்படுகின்றன.
ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி, ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அறியாமையையும், வறுமையையும் ஒழிக்கும் கல்வி செல்வத்தை மாணவர்களுக்கு வழங்கும் பெருமையை பெற்றவர்கள் ஆசிரியர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசின் எண்ணற்ற திட்டங்களை செம்மையான முறையில் பயன்படுத்தி, சிறந்த மாணவர்களை உருவாக்கி வரும் ஆசிரியப் பெருமக்களின் சேவை மெச்சத்தக்கது என வாழ்த்து செய்தியில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி, ஆசிரியர்களுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அறிவு நிலையிலிருந்து மட்டுமல்லாது, அன்பு நிலையிலிருந்தும் மாணவர்களை அணுகி அவர்களுக்கு அரணாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் என தனது வாழ்த்து செய்தியில் துணை முதலமைச்சர் கூறியுள்ளார். மாணவச் செல்வங்களை தேசத்தின் விலை மதிப்பில்லாச் செல்வங்களாக மெருகூட்டித் தருகின்ற உயர்ந்த கடமையைச் செய்பவர்கள் ஆசிரியர்கள் என்றும் அவரது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.