ச்சா..ஒரு டாட்டூ கூட நீ போடல..என்ன நீ இப்படி இருக்க.. என மற்றவர்களை ஏளனமாய் பேசும் அளவிற்கு டாட்டூ தான் கெத்து என இளைஞர்களின் மனதில் பதிந்து டிரெண்ட் ஆகிவிட்டது. டாட்டூ என்றாலே பேஷன், டிரெண்ட் , அடிக்ஷன்.ஒரு முறை டாட்டூ போட்டுக்கொண்டதோடு நிறுத்தமுடியாமல் அதற்கு அடிமையாகி கை, கால் ,தொடை, கழுத்து என உடலில் உள்ள அனைத்து பாகங்களிலும் அவர்களின் டாட்டூ அடிக்ஷன் வெளிப்படுகிறது.எந்த ஒரு விஷயமும் ஆரம்பத்தில் அழகாக தெரியும் பின்பு அவர்களுக்கே ஆபத்தாக முடியும் என்பதற்கு டாட்டூ சிறந்த எடுத்துக்காட்டு.
திரைப்பட நடிகர், நடிகைகள் ,மாடல்கள் , கல்லூரி மாணவர்கள்,வேலைக்கு செல்பவர்கள், தற்போது பள்ளி பருவத்திலேயே டாட்டூ மோகம் வந்துவிட்டது.தாத்தா, பாட்டி காலத்திலேயே பச்சை குத்துதல் என்பது இருந்தது,நாகரீகம் வளர வளர மறைந்து போன நிலையில், தற்போது டாட்டூ என்ற பெயரில் இளைஞர்களை ஈர்க்கிறது.
அழகானதாகவும்,ஆபத்தானதாகவும் தெரியும் டாட்டூ என்றால் என்ன? டாட்டூவினால் ஏற்படும் உடல் பாதிப்புகள் என்ன? என்பதை பார்க்கலாம்.
டாட்டூ என்றால் என்ன?
வண்ணங்களை ஊசிக்குள் செலுத்தி அதன் மூலம் சருமத்தின் மேல் தேவைப்படும் டிசைகன்களை வரைவது தான் டாட்டூ.எந்த அளவு ஊசி ஆழமாக சருமத்தினுள் செல்லுகிறதோ அந்த அளவு டாட்டூ நீடிக்குமாம்.அப்படி ஆழமாக போடப்படும் டாட்டூ சிலருக்கு இறக்கும் வரை கூட இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாம்.
டாட்டூவில் இருவகை உண்டு:
*தற்காலிக டாட்டூ என்பது டாட்டூ போட்டுகொள்ளும் போது வலி ஏற்படுத்தாது,பின்பு சில நாட்களில் தானாக அழிந்துவிடும்.
*நிரந்தர டாட்டூ என்பது போட்டு கொள்ளும் போதும், போட்டுக்கொண்ட பிறகும் சில மணி நேரத்திற்கு வலி இருக்கும்.இது அதிகபட்சமாக 15 முதல் 20 ஆண்டுகள் வரை அழியாமல் இருக்க வாய்ப்புண்டு.
டாட்டூவினால் ஏற்படும் பாதிப்புகள்:
1.டாட்டூ போட்டுக் கொள்பவர்களில் சிலருக்கு ரத்த கசிவு , சருமத்தில் அரிப்பு போன்றவை ஏற்படுகிறது என சில மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
2.டாட்டூ போடும் போது உங்களுக்கு பயன்படுத்தும் ஊசி முதல்முறை பயன்படுத்த படுகிறதா என அறிந்துகொள்ளுங்கள்,இல்லையென்றால் அந்த ஊசி மூலம் பாக்டீரியா பரவக் கூடும்.டாட்டூ டியூபர்குளோசிஸ், எய்ட்ஸ் போன்ற நோய்கள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
3.டாட்டூ போடும் போது மையின் தரத்தை உறுதி செய்யவேண்டும், தரமில்லாத மையை பயன்படுத்தினால் அது இன்பெக்ஷனை உண்டு செய்யும்.அதே போல் அதிக வண்ணங்களை பயன்படுத்தி டாட்டூ போட்டால் சருமத்திற்கு கேடு விழைவிக்கும்.
4.மையின் அடர்த்தி அதிகமாக இருந்தால் அது டாட்டூவை சுற்றியுள்ள பகுதியையும் பாதிக்கும்.இதனால் கிரானுலாமா ( granuloma ) என்னும் பிரச்சனையை ஏற்படுத்தி திசுக்களை கட்டியாக்கிவிடும்.இது நாளையடைவில் புற்றுநோயாகவும் மாற வாய்ப்புள்ளது.
5.அதே போல் லேசர் மூலம் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் போது வெளிப்படும் கதிர்களால் டாட்டூ போட்ட இடம் பாதிக்க வாய்ப்புள்ளது.சருமத்தில் மென்மையான பகுதியான கை, கழுத்து , தொடை போன்ற இடங்களில் டாட்டூ போடுவதை தவிர்க்க வேண்டும்.
டாட்டூவானது சருமத்தை மட்டும் பாதிக்காமல் உடல் உல்லுறுப்புகளையும் பாதிப்படைய செய்கிறது.எனவே வெளித்தோற்ற சந்தோஷத்திற்காக உடலை வறுத்தி கொள்வது தேவையற்றது.ஆரோக்கியமான முறையில் வாழ்வதே உண்மையான சந்தோஷம் என்பதை உணருங்கள்.