துறையூர் அருகே கிணற்றில் சரக்குவாகனம் விழுந்தது 4 பேர் உயிரிழப்பு

துறையூர் அருகே சாலையோரக் கிணற்றில் சரக்குவாகனம் விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 18 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் பேரூரைச் சேர்ந்த 22 பேர்சரக்குவாகனத்தில் துறையூர் அருகே உள்ள கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தனர். திருமானூர் என்னுமிடத்தில் வந்து கொண்டிருந்தபோது டயர் வெடித்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரம் இருந்த தடுப்பு வேலியை உடைத்துக் கொண்டு கிணற்றில் விழுந்தது. இந்த விபத்தில் சரக்குவாகனத்தில் வந்த 22 பேரும் பலத்த காயமடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புப்படையினர், காவல்துறையினருடன் பொதுமக்களும் சேர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களில் குணசீலன், குமாரத்தி ஆகிய 2 பேரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். மீதமுள்ள 20 பேருக்குத் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்குச் சிகிச்சை பயனின்றி மேலும் இருவர் உயிரிழந்தனர். இந்நிலையில் பலத்த காயமடைந்த 15பேர் திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Exit mobile version