டாஸ்மாக் மதுபானக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், உரிய விளக்கம் அளிக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், உயர்நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து டாஸ்மாக் நிர்வாகம் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், 2019 ஏப்ரல் முதல், 2020 மார்ச் வரையில் நடத்தப்பட்ட சோதனைகளில், அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்ததாக, 9 ஆயிரத்து 319 வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.