வரும் 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால், மதுபான கடைகளில் மதுபிரியர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று, கை மற்றும் பை நிறைய மதுபானங்களை வாங்கிச் சென்றனர்…
ஊரடங்கிற்கு முன்னதாக சனி மற்றும் ஞாயிறன்று மதுக்கடைகள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் என்ற அறிவிப்பை அடுத்து, டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் குவிந்தனர். சமூக இடைவெளியை பின்பற்றாமல் மதுபாட்டில்களை வாங்குவதில் மதுப்பிரியர்கள் ஆர்வம் காட்டினர்.
திண்டுக்கல்லில் டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் மூட்டை மூட்டையாக மதுபானங்களை வாங்கிச் சென்றனர். ஒரு நபருக்கு குறைந்தபட்ச அளவாக ஆயிரத்து 440 மில்லி அளவுக்கு மது வகைகள் வழங்க வேண்டும் என்ற விதிமுறையை மீறி, மதுப் பிரியர்களுக்கு மூட்டை மூட்டையாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது.
கடலூரில், பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் இரண்டு மதுபானக் கடைகளில், காலையிலேயே போட்டி போட்டுக் கொண்டு, மதுப் பிரியர்கள் பைகளில் இரு வாரத்திற்கு தேவையான மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். புதுச்சேரியை ஒட்டியப் பகுதி என்பதால், அம்மாநிலத்தை சேர்ந்த மக்களும் கடலூரை நோக்கி படையெடுத்தனர்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே, டாஸ்மாக் கடைகளில் பாதுகாப்பு தடுப்பு கட்டைகளை உடைக்கும் அளவிற்கு மதுப்பிரியர்கள் குவிந்ததால், கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில், டாஸ்மாக் கடைகளில் குவிந்த மதுப் பிரியர்கள், இரண்டு வாரத்திற்கு தேவையான மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர்.