மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றில் நடிகை டாப்ஸி

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி ஆட்டக்காரருமான மிதாலி ராஜ் குறித்த வாழ்க்கை வரலாறு படத்தில் டாப்ஸி நடிக்கவுள்ளார்.

ஆடுகளம் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமான டாப்ஸி அதன்பிறகு ஆரம்பம், வந்தான் வென்றான் உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நடித்தார். தொடர்ந்து இந்தி திரையுலகிற்கு சென்ற டாப்ஸிக்கு அங்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்தியில் சாஸ்மி பதூர்,பிங்க், நாம் ஷபானா, முல்க், பட்லா மற்றும் கேம் ஓவர் ஆகிய திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

இந்த நிலையில், டாப்ஸி இன்று தனது புதிய படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி ஆட்டக்காரருமான மிதாலி ராஜ் குறித்த வாழ்க்கை வரலாறு படத்தில் டாப்ஸி நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதில் சிறப்பு என்னவென்றால், மிதாலி ராஜிக்கு இன்று பிறந்தநாள். அவருக்கு ரோஜாப்பூ தரும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு அதனுடன் இந்த தகவலையும் தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கு ‘சபாஷ் மிது’ என பெயரிடப்பட்டுள்ளது. இதற்காக கவர் ட்ரைவ் உள்ளிட்ட ஆட்ட நுணுக்கங்களை கற்று வருவதாக தெரிவித்துள்ளார். அவரது ரோலில் நடிப்பது தனக்கு பெருமையளிப்பதாக டாப்ஸி கூறியுள்ளார். இந்த பதிவை அவர் மிதாலி ராஜூக்கு சமர்பிப்பதாகவும் , இத்திரைப்படம் நிச்சயம் நீங்கள் பெருமைப்படத்தக்கதாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

 

Exit mobile version