தஞ்சையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுகோய் போர் விமானப்படை தளம் இன்று நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டது .விமான படை தளத்தின் நோக்கம் என்ன ? அதன் செயல்பாடு என்ன?
தஞ்சையை பொறுத்தவரை அங்குள்ள புதுக்கோட்டை சாலையில் 1940-ம் ஆண்டில் தஞ்சை விமானப்படைத்தளம் அமைக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் போது இந்த விமானப்படைத்தளம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்ந்தது. அதற்கு பின்னர் போதிய பராமரிப்பு இன்றி காணப்பட்டது. இதனையடுத்து இந்த விமானப்படைத்தளம் பொலிவுப்படுத்தப்பட்டு கடந்த 2013-ம் ஆண்டில் சுகோய் போர் விமானங்கள் களமிறங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கடந்த 6 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட இப்பணி தற்போது நடைமுறைக்கு வந்தது. சுகோய்-30 MKI ரக போர் விமானப்படைத்தளத்தை நாட்டுக்கு முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் அர்ப்பணித்து இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் தற்போது பல்வேறு பாதுகாப்புத்துறை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். அதனைத்தொடர்ந்து பல்வேறு விமான சாகசங்கள் நடைபெற்றன.
சுகோய்-30 MKI தாங்கி நிற்கும் பிரம்மோஸ் ஏவுகணைகள், 200 முதல் 300.கி.மீ தூரம்வரை துல்லியமாக இலக்கை தாக்கி அழிக்கக்கூடிய சக்தி வாய்ந்தவையாகும். இந்திய பெருங்கடல் பகுதியில் ஏற்படும் ஆபத்தை முறியடிக்கவே தஞ்சாவூரில் இத்தகைய விமானப்படைத்தளம் அமைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூரை மையமாக கொண்டுள்ள போர் விமானப்படை தளத்தில் தற்போது 6 விமானங்கள் மட்டுமே வந்துள்ளது. அடுத்த சில தினங்களில் 20-க்கும் மேற்பட்ட சுகோய்-30 MKI ரக போர் விமானங்கள் பிரம்மோஸ் ஏவுகணைகளுடன் இங்கு அணிவகுக்கும் என்று அதிகாரிகள் அறிவித்திருக்கின்றனர். இந்த தஞ்சாவூர் விமானப்படைத்தளம் என்பது இரண்டு நீளமான ஓடுதளங்களை கொண்டதாகும்.