தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி- தஞ்சை நான்கு வழி சாலை பணி நடைபெறுகிறது. வளர்ச்சிப் பணி என்றாலும் இதனால் பலர் வீடுகள் இழந்து தவிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே நங்குடி, விழுப்பெருந்துறை, வட்டத்தூர், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களின் வழியாக தஞ்சை நான்கு வழிச்சாலை திட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக நிலங்களை கொடுத்தனர். ஆனால் அட்டவணை எண் ஒன்றின்படி இன்னமும் இழப்பீடுகள் கிடைப்பதில் குளறுபடி நடந்து வருகின்றது.
சாலை விரிவாக்க பணிக்காக மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள அட்டவணை-2 புதிய திட்டத்தின் படி இழப்பீடுகளை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால் நெடுஞ்சாலை துறை, தமிழ்நாடு அரசு இரண்டுமே மக்களின் வேதனையை கண்டுகொள்ளவில்லை. இதுபோன்ற இழப்பீட்டு தொகை இந்தியாவில் வேறு நான்கு மாநிலங்களில் வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தமிழகத்திற்கு சாத்தியம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்திருப்பது அப்பகுதி மக்களை ஏமாற்றத்திற்கு ஆளாக்கியுள்ளது.
சாலை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு, மத்திய அரசின் நெடுஞ்சாலைத்துறை இரண்டுமே சம்பந்தப்பட்டுள்ளது. ஆனால் வேற்றுலகவாசிகளைப் போல தாங்கள் அலைக்கழிக்கப்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். முதன்மையாக கையாள வேண்டிய விடியா ஆட்சியோ இம்மக்களின் கோரிக்கையை ஏற்க மறுக்கிறது. இழப்பீடு வழங்கவில்லையெனில் மிகப்பெறும் போராட்டத்தை சந்திக்க நேரிடும் என அப்பகுதி மக்கள் அரசை எச்சரித்துள்ளனர்.