மழை வேண்டியும் உலக மக்கள் நலம்பெற வேண்டியும் தஞ்சை பெரிய கோயிலில் உள்ள வருண பகவானுக்கு 11 வகையான வருணாபிஷேகம் மற்றும் சிறப்பு நவதானிய மகாயாகம் நடத்தப்பட்டது.
தமிழகம் முழுவதும் மழையின்மையால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத்துறை சார்பில் முக்கிய கோயில்களில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் யாகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மழை வேண்டி, தஞ்சை பெருவுடையார் கோயிலில் அமைந்துள்ள வருண பகவானுக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 11 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனையும் காட்டப்பட்டது. இதையடுத்து நவதானிய மகாயாகமும் நடத்தப்பட்டது. தொடர்ந்து இசையஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டு, வருண பகவானுக்கான பாடல்கள் இசைக்கப்பட்டன.
இதேபோன்று, ராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோவிலிலும் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. மழை வேண்டி சேதுமாதவர் தீர்த்தத்தில் சிவாச்சாரியார்கள் வேதமுழங்க வருண ஜெபம் செய்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டனர்.
சென்னை வடபழனி தண்டாயுதபாணி கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. உலக உயிர்கள் நலமுடன் வாழ வேண்டி, வருணன் மற்றும் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் செய்யப்பட்டன. முன்னதாக கலசங்களை கொண்டு பூஜை செய்யப்பட்டு கோயிலின் குளக்கரையிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம் பழனி பெரியநாயகி அம்மன் கோயிலில் வருண ஜபம் நடத்தப்பட்டது. கொடிமரத்தில் புனித தீர்த்தங்கள் வைக்கப்பட்டு வருணஜபம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட வேதவிற்பன்னர்கள் மார்பளவு நீரில் இறங்கி வேதங்கள் முழங்க வருணஜபம் செய்தனர். பொதுமக்களும் இதில் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.