தமிழக கிராமத்திற்கு தேசிய அளவில் முதலிடம்!

மத்திய அரசின் அந்தியோதயா திட்டத்தின் கீழ் வெளியான தரவரிசைப் பட்டியலில், தமிழகத்தைச் சேர்ந்த மொழுகம்பூண்டி கிராமம், இந்தியாவின் மிகச் சிறந்த கிராமமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மொழுகம்பூண்டி கிராமம், மத்திய அரசின் அந்தியோதயா திட்டத்தின் கீழ் இந்தியாவின் தலைசிறந்த கிராமப் பஞ்சாயத்தாக தேர்வாகி உள்ளது. வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்பிற்கான திட்டங்களை மிகவும் சிறப்பாக நிறைவேற்றிய கிராமப் பஞ்சாயத்து என்ற அடிப்படையில் இந்த கிராமத்திற்கு தேசிய அளவில் முதலிடம் கிடைத்து உள்ளது.

இரண்டாவது இடத்தை பம்பானியா ஜிபி என்ற குஜராத் கிராமம் கைப்பற்றி உள்ளது. மூன்றாவது இடத்தை குஜராத்தைச் சேர்ந்த 4 கிராமங்கள் கூட்டாகக் கைப்பற்றி உள்ளன. 4 ஆவது இடத்தை 2 தமிழக கிராமங்கள் 2 பஞ்சாப் கிராமங்கள் ஒரு மகாராஷ்டிர
கிராமம் என 5 கிராமங்கள் கூட்டாகக் கைப்பற்றி உள்ளன.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, சிறந்த கிராமப் பஞ்சாயத்திற்கான இந்தப் பட்டியலின் முதல் 10 இடங்களை 269 கிராமங்கள் பகிர்ந்துள்ளன. இந்தக் கிராமங்களில் 21 கிராமங்கள் தமிழகத்தைச் சேர்ந்தவையாக உள்ளன.

இதே போல கடந்த 2018ஆம் ஆண்டில் வெளியான சிறந்த கிராமங்களின் பட்டியலில் முதல் 50 இடங்களில் 49 இடங்களை ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமங்கள் மட்டுமே பெற்றன. ஒரே ஒரு இடம் மட்டும் குஜராத் மாநிலத்தின் பதான் மாவட்டதைச் சேர்ந்த கிராமத்திற்குக் கிடைத்தது. ஆனால் இந்த ஆண்டு அந்த நிலை அப்படியே தலைகீழாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்தியோதயா திட்டத்தின் கீழ் கிராமங்களுக்கான தேசிய தரவரிசைப் பட்டியல் பல்வேறு மதிப்பீடுகளின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றது. விவசாயம், சாலைகள், பொதுசுகாதாரம், பொது வினியோகம், வீட்டுவசதி, மின்சாரம், குடிநீர், கல்வி, வறுமை ஒழிப்பு என இந்த மதிப்பீடுகளின் பட்டியல் மிக நீளமானது.

கடந்த 2017ஆம் ஆண்டில் 46 அளவு கோல்களின் அடிப்படையில் இந்த பட்டியல் உருவாக்கப்பட்டது, ஆனால் 2019ஆம் ஆண்டுக்கான பட்டியலோ 112 அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது. இந்தப் பட்டியலுக்காக இந்தியா முழுவதும் உள்ள 2 லட்சத்து 40 ஆயிரம் கிராமங்கள் பட்டியலிடப்பட்டு அவற்றில் 2 லட்சத்து 10 ஆயிரம் கிராமங்கள் மதிப்பீடு செய்யப்பட்டன. இவ்வளவு கடும் போட்டியின் இடையிலும் தமிழக கிராமம் ஒன்று தேசிய அளவில் சிறந்த கிராமமாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளதும், இந்தியாவின் சிறந்த கிராமங்களின் பட்டியலில், தமிழகத்தின் 21 கிராமங்கள் இடம்பெற்று இருப்பதும் ஒவ்வொரு தமிழருக்கும் பெருமை தரக் கூடிய செய்தியாக உள்ளது. தமிழகத்தில் அதிமுகவின் பொற்கால ஆட்சி நடைபெறுவதையே இந்த தரச் சான்றுகள் உலகுக்கு உரக்கக் கூறுகின்றன.

Exit mobile version