கொரோனா பரவல் காரணமாக கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் பிப்ரவரி 1 முதல் 20ஆம் தேதி வரை ஆன்லைனில் நடைபெறும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவுவதால் தினசரி பாதிப்பு 29 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையாக வருகிற 31ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசு மற்றும் தனியார் கலைக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் பிப்ரவரி ஒன்றாம் தேதி தொடங்கி 20ஆம் தேதிக்குள் ஆன்லைன் முறையில் செமஸ்டர் தேர்வு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செமஸ்டர் தேர்வு முடிந்ததும் தேர்வுத்தாள்களை அனுப்பி வைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாண்டுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் மட்டும் நேரடியாக நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.