அரசு பேருந்து ஓட்டுநர் வெட்டப்பட்ட சம்பவத்தை சுட்டி காட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரையில் இருந்து, திருப்பூர் நோக்கி சென்ற அரசுப் பேருந்து, ஆரப்பாளையத்தில் இருந்து காளவாசல் வழியாக சென்றுகொண்டிருந்தது. பின்புறமாக வந்த கார், ஒன்று, அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
குறுகலான சாலை மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக அரசுப் பேருந்து ஓட்டுநரான ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த பேருந்து ஓட்டுநரான முத்துகிருஷ்ணன் வழிவிட இயலவில்லை என சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் முந்திச் சென்று, பேருந்தை வழிமறித்த கார் ஓட்டுநர், முத்துகிருஷ்ணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றவே, பேருந்தின் கண்ணாடியை கார் ஓட்டுநர் அடித்து நொறுக்கியுள்ளார். பின்னர், பேருந்து ஓட்டு முத்துகிருஷ்ணனை கடுமையாகத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்த காவல்துறையினர், பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை கைது செய்தனர்.